ஓ.டி.டி.யில் உள்ள குழந்தைகள் பார்க்க வேண்டிய சிறந்த படங்கள்
|குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓ.டி.டி தளத்தில் உள்ள சிறந்த படங்கள் குறித்த ஒரு பார்வை.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஜவஹர்லால் நேரு. அவர் குழந்தைகள் மீது அலாதி பிரியம் வைத்திருந்தார். இவரின் பிறந்தநாளை தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம் என்ற அவரின் கருத்துகளை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓ.டி.டி தளத்தில் சிறப்பாகவும், குழந்தைகள் பார்த்து மகிழும் விதமாக இருக்கும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
'பசங்க 2'
ஹைக்கூ குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா, அமலா பால், கார்த்திக் குமார், பிந்து மாதவி மற்றும் இவர்களுடன் பல குழந்தைகளும் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'அப்பா'
அப்பா சமுத்திரகனி தானே இயக்கி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இக்கதை மூன்று குடும்பங்களில் வித்தியாசமான சூழலில் வாழும் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'சைவம்'
சைவம் 2014-ம் ஆண்டின் எதார்த்தமான திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஏ எல் விஜய். இப்படத்தில் நாசர் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'பிரிட்ஜ் டு டெராபித்தியா'
கேத்ரின் பேட்டர்சனின் 1977 நாவலை அடிப்படையாகக் கொண்டு கேபோர் சூபோ இயக்கிய ஒரு கற்பனை நாடகமாகும். இரு இளம் நண்பர்கள், அவர்களின் சிக்கலான உண்மைகளிலிருந்து தப்பித்து ஒன்றாக நேரத்தை செலவிட 'டெராபிதியா' என்ற கற்பனை உலகத்தை உருவாக்குகிறார்கள். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'ஹரோல்ட் மற்றும் பர்பில் க்ரேயன்'
கார்லோஸ் சல்டான்ஹா இயக்கிய ஒரு கற்பனை நகைச்சுவை. இது க்ரோக்கெட் ஜான்சனின் 1955 குழந்தைகள் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. . லைவ்-ஆக்சன் மற்றும் அனிமேஷனைக் கலந்த இப்படத்தில் சச்சரி லெவி, லில் ரெல் ஹோவரி மற்றும் ஜூயி டெஸ்சனல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'தி ரெட் பலூன்'
ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பை பேசுகிறது இப்படம். அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் காட்டும் இப்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'வீ கேன் பி ஹீரோஸ்'
ராபர்ட் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கிய குழந்தைகளுக்கான சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். கதை பூமியின் சூப்பர் ஹீரோக்களின் குழந்தைகளைப் பின்தொடர்கிறது. பெற்றோரையும் கிரகத்தையும் காப்பாற்ற அணிசேரும் குழந்தைகள் பற்றிய படமாகும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
'யெஸ் டே'
ஆமி க்ரூஸ் ரோசென்டல் மற்றும் டாம் லிச்சென்ஹெல்ட் ஆகியோரின் குழந்தைகள் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மிகுவல் ஆர்டெட்டா இயக்கிய குடும்ப நகைச்சுவை படமாகும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.