ஓ.டி.டி.யில் வெளியாகும் அனன்யா பாண்டே நடித்த 'சிடிஆர்எல்' படம்
|அனன்யா பாண்டே நடித்துள்ள 'சிடிஆர்எல்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. இவர் 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 'சிடிஆர்எல்' என்ற படத்தில் நடித்துள்ளார். சாப்ரான் மற்றும் அந்தோலன் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தினை இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வானே இயக்குகிறார். வரவிருக்கும் இந்த திரில்லர் படத்தில் அனன்யா பாண்டே கண்டன்ட் கிரியேட்டராக நடிக்கிறார். இவர் இந்த படத்தில் விஹான் சமத்துடன் இணைந்து நடிக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் உள்ள தொழில்நுட்பத்தையும், டிஜிட்டல் புரட்சியையும் காட்டும் படமாக இது அமைந்துள்ளது.
இந்த படம் குறித்து நடிகை அனன்யா பாண்டே கூறியதாவது, " இந்த படம் அனைவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படும், மேலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் உண்மையிலேயே கட்டுப்படுத்துகிறீர்களா என்று உங்களை ஆச்சரியப்பட வைக்கும், இந்தப் படம் அனைவருக்கும் ஏற்றது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இப்படம் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் 4-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.