ஓ.டி.டி.யில் வெளியாகும் அக்சய் குமாரின் 'சர்பிரா'
|'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் படமான 'சர்பிரா' ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் பொதுமக்களுக்கு வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்தார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாகவும், ராதா மதன் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தை கேப் ஆப் குட் பிலிம்ஸ், அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 11-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.