வைரலான கீர்த்தி சுரேஷின் திருமண செய்தி...! தாய் மேனகா சுரேஷ் விளக்கம்
|நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளார்
சென்னை
மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிறகு பிறகு விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னிணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.
தற்போது தமிழில் சைரன், மாமன்னன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களும், தெலுங்கில் போலா சங்கர், தசரா போன்ற படங்களும் தயாராகி வருகின்றன. இவ்வாறு பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது காதல் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவியதோடு, இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று அவரது பெற்றோர் விளக்கம் அளித்தனர். இதையடுத்து தான் அந்த காதல் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன்பு இணையதளங்களில் தகவல்கள் பரவின. கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பரை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளார். இது முழுக்கப் பொய்யான செய்தி எனத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பாக பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.