'டிராப் சிட்டி' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு
|இப்படத்தில் யோகி பாபு நாம் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை,
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், 'மண்டேலா' படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் 'போட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், 'மண்ணாங்கட்டி, வானவன் மற்றும் ஜோரா கைய தட்டுங்க' போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் யோகி பாபு 'டிராப் சிட்டி' என்ற படத்தின் மூலம் முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை திருச்சியை சேர்ந்த பிரபல இயக்குனர் டெல் கே.கணேசன் இயக்குகிறார். இந்த படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் டெல் கணேசன் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை 'டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அவர், பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் குமாரையும் தனது திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு நடிக்கும் இந்த படம் சவாலான இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தை காட்டுகிறது. டிராப் சிட்டி படத்தில் நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவை இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டிற்கு கணேசன் அறிமுகப்படுத்த உள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.