சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் பாடலாசிரியருக்கு கொலை மிரட்டல்
|சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் பாடலில் 'லாரன்ஸ் பிஷ்னோய்' தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதால் பாடலாசிரியருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கந்தர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலில் சல்மான் கான் மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிக்கந்தர் படத்தின் 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்தப் பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும், அவரை உயிருடன் விடமாட்டோம். இந்தப் பாடலை எழுதியவரின் வாழ்க்கையை அடுத்த ஒரு மாதத்தில் முடித்துவிடுவோம் என்று மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பான மெசேஜ் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது. அந்த கொலை மிரட்டல் மெசேஜில், சல்மான்கானுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலாசிரியரை காப்பாற்றட்டும் என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது.இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.