'கேம் சேஞ்சர்' படத்தின் 2-ம் பாகம் வருமா ? - மவுனம் கலைத்த நடிகர் ஸ்ரீகாந்த்
|இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஸ்ரீகாந்த் இத்திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றியும் இப்படத்தின் 2- ம் பாகம் குறித்தும் பேசினார் . இது குறித்து அவர் கூறுகையில்,
'இயக்குனர் ஷங்கர், படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே என்னை வசதியாக உணர வைத்தார். படத்தயாரிப்பாளர்கள் அதிக பொறுமையானவர்கள். தேவையான அளவு டேக்குகளை எடுக்கிறார்கள். கேம் சேஞ்சர் ஒரு தனித் திரைப்படம். அதன் தொடர்ச்சியாக 2-ம் பாகம் உருவாகாது என்றுதான் நினைக்கிறேன்' என்றார்.