'ஜெயிலர் 2' படத்தின் மூலம் தனுஷின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா?
|ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் நீண்ட நாள் ஆசை.
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் நிறைய கேமியோ ரோல்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் மோகன்லால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது நடிகர் தனுஷ், ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. நெல்சனும் தனுஷை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டம் போட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனாக தனுஷ் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் தான் தனுஷ். ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. எனவே தனுஷின் ஆசை 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.