ரன்பீர் கபூர், அக்சய் குமார் மற்றும் கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? - பகிர்ந்த கங்கனா ரனாவத்
|கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? என்பதற்கு கங்கனா ரனாவத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை,
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர் கங்கனா ரனாவத். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட தேர்வுகள் மற்றும் வெளிப்படையாக பேசும் இயல்புக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ரன்பீர் கபூர், அக்சய் குமார் மற்றும் கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில்,
'அவர்களின் படங்களில் கதாநாயகிக்கு இரண்டு காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே இருக்கும். இதனால், நான் அவர்களின் படங்களை நிராகரித்தேன். அனைத்து கான்களும் மிகவும் அன்பானவர்கள், அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டதில்லை. இருப்பினும், அவர்களின் படங்களில் நடித்தால் பெண் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும்.
எனக்குப் பின் வரப்போகும் நடிகைகளுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன், எந்த கான்களும் உங்களை வெற்றியடையச் செய்ய முடியாது, எந்த குமாரும் உங்களை வெற்றிபெறச் செய்ய முடியாது, எந்த கபூரும் உங்களை வெற்றிபெறச் செய்ய முடியாது. ஹீரோவால் மட்டுமே ஹீரோயினை வெற்றிபெறச் செய்ய முடியும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்க நான் விரும்பவில்லை, என்றார்.