'இந்தி படங்களில் ஏன் நடிக்கவில்லை?'- தேவி ஸ்ரீ பிரசாத்தின் கேள்விக்கு அல்லு அர்ஜுன் பதில்
|நேற்று மும்பையில், 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று மும்பையில், படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
பின்னர் புஷ்பா2 படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அல்லு அர்ஜுன், 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது வென்ற இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடனான உரையாடல்களை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'தேவி ஸ்ரீ பிரசாத்திடம் ஏன் இந்தி படங்களில் இசையமைக்க கூடாது என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை, நீங்கள் ஏன் இந்தி படத்தில் நடிக்கவில்லை?. நீங்கள் நடித்தால் உங்களோடு சேர்ந்து நானும் ஒரு இந்தி படம் செய்வேன் என்றார். அதற்கு, நான் ஒருபோதும் இந்தி படத்தில் நடிக்க மாட்டேன் என்றேன். ஏனென்றால், அந்த நேரத்தில், பாலிவுட்டில் நுழைவது மிகவும் கடினமாக இருந்தது' என்றார்.