< Back
சினிமா செய்திகள்
Why acted in only a few films in hindi? - Nithya Menen Reacted
சினிமா செய்திகள்

இந்தியில் ஒரு சில படங்களே நடித்ததற்கான காரணம் ? - பகிர்ந்த நித்யா மேனன்

தினத்தந்தி
|
28 Oct 2024 7:16 AM IST

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் நித்யா மேனன் இந்தியில் அறிமுகமானார்.

சென்னை,

கன்னட படத்தின் மூலம் 2006-ல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு, என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழில் அவர் நடிப்பில் வெளியான, 'காஞ்சனா - 2', 'ஒகே கண்மணி', 'மெர்சல்', 'திருச்சிற்றம்பலம்' ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

அவர் நடிப்பில் உருவான 'குமாரி ஸ்ரீமதி', 'மாஸ்டர்பீஸ்' ஆகிய இணைய தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில், இவருக்கு 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளார். அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் இவர் இந்தியில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டே 'பிரீத்: இன் டு தி ஷாடோஸ்' என்ற இந்தி வெப் தொடரில் நடித்திருந்தார். இதன் பின்பு அவர் இதுவரை இந்தியில் நடிக்கவில்லை.

இந்நிலையில், இந்தியில் ஒரு சில படங்களே நடித்ததற்கான காரணத்தை நித்யா மேனன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ' அங்குள்ள நடிகர், நடிகைகள் தங்களுடைய குணாதிசயங்களுடன் பொருந்தக்கூடிய பாத்திரத்திலும், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். ஒரு நடிகையாக என்னுடைய வரம்பைப் பற்றி அவர்களுக்கு தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை' என்றார்.

முன்னதாக பிரபல பாலிவுட் இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே உடன் பணியாற்ற விரும்புவதாக நித்யா மேனன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்