'ஸ்ட்ரீ' படப்பிடிப்பின்போது அமானுஷ்ய அனுபவத்தை எதிர்கொண்டதாக கூறிய இயக்குனர்
|அமர் கவுஷிக் 'ஸ்ட்ரீ' படப்பிடிப்பின்போது அமானுஷ்ய அனுபவத்தை சந்தித்ததாக கூறினார்.
மும்பை,
ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஸ்ட்ரீ'. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இயக்குனர் அமர் கவுஷிக் 'ஸ்ட்ரீ' படப்பிடிப்பின்போது அமானுஷ்ய அனுபவத்தை சந்தித்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'மத்திய பிரதேசத்தின் சாந்தேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதற்காக படக்குழுவினர் அனைவரும் அங்கு புறப்பட்டு சென்றிருந்தோம். எங்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாள் முன்பு, சில உள்ளூர்வாசிகள் எங்களிடம் வந்து, படப்பிடிப்புக்காக நாங்கள் தேர்ந்தெடுத்த தெருவில் பேய்கள் இருப்பதாகவும், யாரும் அங்கு போவதில்லை என்றும் கூறினார்கள். ஆனால் அந்த இடம், இரவு படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்பதால் நாங்கள் சென்றோம். அந்த இரவில் நாங்கள் படப்பிடிப்பின்போது நிறைய அமானுஷ்ய அனுபவங்களை எதிர்கொண்டோம்," என்றார்.