'ஒரு பெண் வாழ்நாளில் கடக்க வேண்டிய கடினமான பணி அது ' - ஆலியா பட்
|நடிகை ஆலியாபட், தாய்மை தனக்கு ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பகிர்ந்தார்.
மும்பை,
இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியாபட். ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.
இவர் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ராகா' என்று பெயரிட்டுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகை ஆலியாபட், தாய்மை தனக்கு ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பகிர்ந்தார். அப்போது அவர் கூறுகையில்,
'ஒரு பெண் வாழ்நாளில் கடக்க வேண்டிய கடினமான பணிகளில் ஒன்று பிரசவம். அது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, ஒரு பெண்ணிற்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. எனக்கு உடல், தலைமுடி, தோல் ஆகியவற்றில் மாற்றங்கள் உண்டாகின. ஆனால் என் மனம் வளர்ந்திருக்கிறது', என்றார்.