'சூர்யா 45' கதை முதலில் எழுதப்பட்டது இந்த நடிகைக்காகவா?
|சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க உள்ளார்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் 'கங்குவா' திரைப்படம் வருகின்ற நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக இப்படத்திற்கு 'சூர்யா 45' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை முதலில் ஆர்.ஜே.பாலாஜி நடிகை திரிஷாவுக்காக எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், இப்படத்தின் கதையை சூர்யாவுக்கு ஏற்றவாறு படக்குழு மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது வெறும் தகவல் மட்டுமே, இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.