< Back
சினிமா செய்திகள்
போர்கள் ஒழிக்கப்பட வேண்டியவை... - வைரமுத்து வெளியிட்ட பதிவு
சினிமா செய்திகள்

"போர்கள் ஒழிக்கப்பட வேண்டியவை..." - வைரமுத்து வெளியிட்ட பதிவு

தினத்தந்தி
|
22 Sept 2024 10:30 AM IST

தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம், தொழில்நுட்பத்தாலேயே அழியப் போவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போர்கள்

ஒழிக்கப்படவேண்டியவை

இல்லையெனில் - அவை

பூமியை ஒழித்துவிடும்

மத்திய கிழக்கிலும் -

உக்ரைன் - ரஷியாவிலும்

வெடிக்கும் வெடிகளின் புகைநெடி

உலகக் காற்றில்

மரணவாசனை கலந்துபோகிறது.

லெபனானின் பெய்ரூட் நகரத்தில்

பேஜர்கள் வெடித்ததில்

ஐஸ்கிரீமில் ரத்தம் வடிகிறது.

போர் உத்திகளில்

இது ஒரு மோசமான முன்னெடுப்பு

உலக மனிதர்கள் கையாளும்

7.2 பில்லியன் கைபேசிகளும்

வெடிகுண்டுகளாகும்

விபரீதம் நேர்ந்தால்

இந்த பூமி எனும் சிறுகோளைக்

கடவுளும் காப்பாற்ற முடியாது;

கடவுளையும் காப்பாற்ற முடியாது

தண்ணீரில் பிறந்த மீன்

தண்ணீரிலேயே

குழம்பாவது மாதிரி

தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம்

தொழில்நுட்பத்தாலேயே

அழியப் போகிறது

மூன்றாம் உலகப்போர் மூண்டால்

அதுதான் இறுதிப்போர்

காற்று ஆள்தேடி அலையும்;

சுவாசிக்க நாசி இருக்காது

மில்லி மீட்டர்

மில்லி மீட்டராக ஏறிய நாகரிகம்

மீட்டர் மீட்டராகச் சறுக்கி அழியும்

இந்த நிலையில்

அமெரிக்கத் துருப்புகள்

தங்கள் பீரங்கிகளை

ஈரானின் எண்ணெய்க்

கிணறுகளை நோக்கித்

திருப்பத் துடிப்பது

ஏசுவுக்கே

ஏற்புடையதாக இருக்காது

உலக நாடுகளே!

அருள்கூர்ந்து

காலநேரத்தோடு கவலைப்படுங்கள்

கோடிக்கணக்கான

குழந்தைகளின்

மலர்போன்ற கைகளில்

மாமிசம் ஒழுக வேண்டுமா?

போர்களை நிறுத்துங்கள்

இது

உலகை நேசிப்பவனின்

ஒற்றைக் குரல்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்