7 வருடங்களை நிறைவு செய்த விஜய்யின் 'மெர்சல்' - ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி பதிவு
|'மெர்சல்' வெளியாகி 7 வருடங்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
'தெறி' படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீ- விஜய் கூட்டணியில் உருவான படம் 'மெர்சல்'. இப்படத்தில் வெற்றி, மாறன், வெற்றிமாறன் என மூன்று வேடங்களில் விஜய் நடித்திருந்தார். மேலும் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக இருந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். 'மெர்சல்' படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,''என் மீது நம்பிக்கை வைத்து 'மெர்சல்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்திய அட்லி சாருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. மெர்சல் படம் எப்போதும் நம் அனைவரின் இதயத்திலும் ஒரு சிறப்பான இடத்தை பிடித்த படமாக இருக்கும்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜி.கே.விஷ்ணு 'மெர்சல்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இவர் ஒளிப்பதிவு செய்திருந்தவிதம் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தை அளித்தது. அதன்பிறகு அட்லியின் விருப்பமான ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு மாறினார். தொடர்ந்து அட்லியின் அடுத்த இரண்டு படங்களான 'பிகில்' மற்றும் 'ஜவான்' படங்களுக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.