< Back
சினிமா செய்திகள்
மக்களுக்கு நல்லது செய்ய விஜய் விருப்பப்படுகிறார் - நடிகர் பார்த்திபன்
சினிமா செய்திகள்

மக்களுக்கு நல்லது செய்ய விஜய் விருப்பப்படுகிறார் - நடிகர் பார்த்திபன்

தினத்தந்தி
|
26 Jan 2025 10:01 AM IST

வேங்கைவயல் சம்பவம், டங்ஸ்டன் விவகாரம் குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காவல்துறை இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும். அரசாங்கத்தை ஆதரித்து அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை வாங்கிக்கொள்வது நல்லது. அதே நேரம் ஒட்டுமொத்தமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும்போது நிச்சயம் அதனை சுட்டிக்காட்ட வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்தில் முழுக்க முழுக்க மக்களுக்குதான் வெற்றி கிடைத்து இருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் வெற்றி என கூறினாலும், அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதே மக்களால்தான்.

நடிகர் சங்கம் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் அது நிறைவேறாததால் சோர்வு ஏற்படுகிறது. நடிகர்கள் ஏதாவது கருத்து கூறினால் அதன் மீதான முரண்பாடு விவாதம் அதிகமாகிவிடுகிறது. நடிகர் பேசுவதை கவனிக்கிறார்கள், ஆனால் அவர்கள் கூறும் பிரச்சினையை கவனிப்பதில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய விஜய் விருப்பப்படுகிறார். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், மக்கள் ஆதரவு விஜய் பக்கம் வந்துவிட்டால் அரசு செய்ய நினைப்பதை செய்ய முடியாது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது அவருக்கு ஏற்படாத இடர்பாடுகள் கிடையாது. விஜயகாந்தும் இடரை சந்தித்தார். இதனை எல்லாம் மீறி வெற்றி பெற வேண்டியதுதான், புதிதாக வருபவர்களின் கடமையாக இருக்கும். அப்படி வெற்றி பெற்றால்தான் அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இப்போதைக்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்