தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி?
|'விடுதலை -2' படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
'விடுதலை -2' படம் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அதன்படி, தெலுங்கில் படத்தின் புரமோஷனில் ஈடுபட்டிருந்த விஜய் சேதுபதி, விரைவில் தெலுங்கில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் தெலுங்கில் சில இக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன். விரைவில் அது நடக்கும்" என்றார். விஜய் சேதுபதி சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதையடுத்து சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்வன் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாக 'உப்பெனா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.