< Back
சினிமா செய்திகள்
விடுதலை 2 புரோமோஷனில் கங்குவா படம் குறித்த கேள்வி…. கடுப்பான விஜய் சேதுபதி!
சினிமா செய்திகள்

'விடுதலை 2' புரோமோஷனில் 'கங்குவா' படம் குறித்த கேள்வி…. கடுப்பான விஜய் சேதுபதி!

தினத்தந்தி
|
17 Dec 2024 2:33 PM IST

சூர்யாவின் ‘கங்குவா’ படம் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. இப்படத்தின், 'தினம் தினமும்' என்ற முதல் பாடல் வெளியாகி வைரலானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில் 'விடுதலை -2' படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரோமோஷன் பணிகளில் தீவிரமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அவ்வகையில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது விஜய் சேதுபதியிடம், 'சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் சரியாக ஓடுவதில்லை' என்றும் 'சூர்யாவின் கங்குவா எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை' என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, "நான் இங்கு 'விடுதலை -2' படத்தின் புரோமோஷனுக்காக வந்திருக்கிறேன். சம்பந்தமில்லாமல் இந்த கேள்வியெல்லாம் ஏன் கேட்கிறீர்கள். யாரும் தோல்வியடைய வேண்டும் என்று படங்கள் எடுப்பதில்லை. வெற்றி பெற வேண்டும் என்றுதான் எடுக்கிறார்கள். தோல்வி என்பது எல்லா நடிகர்களுக்கும் வரும். எனக்கும் வந்திருக்கிறது. நானும் ஒரு நான்கு ஆண்டுகள் எந்தவொரு ஹிட்டும் கொடுக்காமல் இருந்தேன். என்னையும் கடுமையாக ட்ரோல் செய்திருக்கிறார்கள். சினிமாவில் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஒரு படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பலருக்கும் போட்டுக் காண்பித்து, அவர்களின் விமர்சனங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தவறுகளைச் சரிசெய்து படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறோம். எதிர்பார்த்தப்படி சில திரைப்படங்கள் வெற்றியடையும், சில திரைப்படங்கள் தோல்வியடையும். அது படத்தைப் பார்க்கும் மக்கள் கையில்தான் இருக்கிறது. படம் தோல்வியடைந்தால் அதிலிருந்து கற்றுக் கொண்டு, தவறுகளை சரி செய்துகொள்வோம். வெற்றி, தோல்வி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எந்த திரைத்துறைக்கும் இது நடக்கும்" என்று பேசியிருக்கிறார்.

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படம் கடுமையாக விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்