விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற 'அலங்கு' படக்குழுவினர்
|அலங்கு திரைப்பட டிரெய்லரை பார்த்த நடிகர் விஜய், பட குழுவினரை பாராட்டியுள்ளார்.
சென்னை,
அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சவுமியா தயாரித்துள்ள படம் 'அலங்கு'. `உறுமீன்', `பயணிகள் கவனிக்கவும்' போன்ற திரைப்படங்களின் இயக்குனரான எஸ்.பி. சக்திவேல் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில், மலையாள நடிகர் செம்பன் மற்றும் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
வருகிற 27ம் தேதி ரிலீசாகும் 'அலங்கு' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் அலங்கு திரைப்பட டிரெய்லரை பார்த்த நடிகர் விஜய், பட குழுவினருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.