< Back
சினிமா செய்திகள்
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல - நடிகர் விஷால்
சினிமா செய்திகள்

'விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல' - நடிகர் விஷால்

தினத்தந்தி
|
25 Oct 2024 10:04 PM IST

விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதற்காக கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"விஜய்க்கு முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான். மக்களுக்கு விஜய் என்ன செய்யப்போகிறார்? அவரது மனதில் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்? என்றெல்லாம் அறிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.

விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல. அது மிகப்பெரிய முடிவு. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஒருவர், அதை விட்டு விலகி மக்களுக்காக வருகிறேன் என்று சொல்வது மிகவும் வரவேற்கக் கூடிய விஷயம். அவருக்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு. மாநாட்டுக்கு செல்வது குறித்து நான் எதுவும் முடிவு செய்யவில்லை. மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்."

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்