சென்னையில் நாளை விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி! மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு சலுகை
|சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், விஜய் ஆண்டனி சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நாளை நடத்துகிறார். அதில் அவரது பாடல்கள் பாடப்பட உள்ளன. இந்த இசை நிகழ்ச்சியில் மகாலிங்கம், ரேஷ்மா, ஆதித்யா, சந்தோஷ், சாம் விஷால் உள்ளிட்டோர் பாட உள்ளனர். இந்த இசை நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
'விஜய் ஆண்டனி - இன்னிசை கச்சேரி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. இன்சைடர், டிஸ்ரிக்ட் தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.