பட விழாவில் நடனமாடியபோது தவறி விழுந்த வித்யா பாலன் - வீடியோ வைரல்
|நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த வித்யா பாலன் தற்போது 'பூல் பூலைய்யா 3' படத்தில் நடித்துள்ளார்.
மும்பை,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழில் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் 'பூல் பூலைய்யா 3' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இப்படத்தின் 3-ம் பாகம் வெளியாகவுள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
இப்படம் தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது நவம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், மும்பையில் பட விழா ஒன்று நடைபெற்றது. இதில், மாதுரி தீட்சித் மற்றும் வித்யா பாலன் இருவரும் நடனமாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக நடிகை வித்யாபாலன் தவறி விழுந்தார்.
ஆனால், அதை சாமர்த்தியமாக சமாளித்த வித்யா தொடர்ந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.