ஆடுகளத்தைவிட கடினமான படம் 'விடுதலை' - இயக்குனர் வெற்றி மாறன்
|இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. இப்படத்தின், 'தினம் தினமும்' என்ற முதல் பாடல் வெளியாகி வைரலானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் ஏழு இடங்களில் மாற்றம் செய்ய சொல்லி சென்சார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரசு, அரசாங்கங்கள், தேசிய இன விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்சார் போர்டின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக இருப்பதாகவும் உண்மையான வசனங்களை இடம் பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு. இதுதொடர்பாக எக்ஸ் பதிவில்,"சமூக அக்கறையுள்ள இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்களின் விடுதலை இரண்டாம் பாகம் வரும் 20ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. குறிப்பாக, 'அரசு''அரசாங்கம்', 'தேசிய இன விடுதலை' ஆகிய இடங்களில் ஒலியை நிறுத்தவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. 'பிரச்சனையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களங்களிலிருந்து உருவாக்கிக்கனும்' என்று படத்தில் உள்ள வசனத்தை 'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்' என்று திருத்தும்படி சொல்லியுள்ளது சென்சார்.
ஆபாசம்,பிற்போக்குத்தனம், சனாதனப்பரப்புரை என திரையை அழுக்காக்கி, சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் சூழலில், சமூகத்தையும் இளைஞர்களையும் சமூகநீதி பாதைக்கு அழைத்துச்செல்லும் சமூக பொறுப்போடு களமாடி வருபவர் திரு.வெற்றிமாறன் அவர்கள். விடுதலை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில்,தணிக்கை குழுவினரின் இந்த போக்கு படைப்பிலக்கியவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும். தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.
இந்நிலையில் நேர்காணலில் பங்கேற்ற வெற்றி மாறனிடம், 'நீங்கள் இயக்கிய படங்களிலேயே கடினமான உழைப்பைக் கோரிய படம் எது?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு வெற்றி மாறன், "நான் இயக்கியதிலேயே 'ஆடுகளம்' கடினமான படமாக இருந்தது. ஆனால், 'விடுதலை 1' மற்றும் 'விடுதலை 2' படங்கள் அதைவிட கடினமாக அமைந்துவிட்டது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அதிக உழைப்பை எடுத்துக்கொண்ட படமாக விடுதலை உருவாகியிருக்கிறது.
கடைசி நேரத்தில் படத்தில் உள்ள 8 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளோம். படக்குழுவில் இருந்த அனைவருக்கும் இது ஒரு அனுபவம். இந்த பயணமே மிகப் பெரியது. எல்லாருடைய பங்களிப்பும்தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளது' என்றார்.