'விடுதலை 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
|இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை,
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை 2' திரைப்படம் நாளை வௌியாகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
'விடுதலை 2' திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'விடுதலை 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.
இந்நிலையில், 'விடுதலை 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் வெளியாக இருந்தநிலையில், நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.