விடாமுயற்சி படம் : அஜித்தின் பொறுப்புணர்வு குறித்து மனம் திறந்த கல்யாண் மாஸ்டர்
|மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
அதனை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'சவதீகா' என்ற லிரிக்கல் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் தற்போது வரை 70 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள அஜித்தின் டான்ஸ் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் நடிகர் அஜித் குறித்த மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, "விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'சவதீகா' பாடலின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. அதனால் அவர் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார். எல்லாரும் அவரை ஓய்வெடுக்க சொன்னோம். ஆனால் 40 டான்சர்கள் இருக்காங்க, என்னால் அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்றார். நான் அரை மணி நேரத்துல வரேன் எனச் சொல்லி ஆன்டி பயாடிக் மாத்திரைகளை போட்டுக் கொண்டு வந்து பாடலுக்கு டான்ஸ் ஆடினார்" என்று கூறியுள்ளார்.