
வெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படம் - பா. ரஞ்சித்தை விளாசிய இயக்குநர் மோகன் ஜி!

இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பாராட்டிய பா. ரஞ்சித்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.
சென்னை,
இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பேட் கேர்ள்'. இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .இப்படத்தின் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டீசரை பகிர்ந்த இயக்குநர் பா. இரஞ்சித், "பேட் கேர்ள் திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் தைரியமான, புத்துணர்ச்சியான படம். இதனை தயாரித்ததற்காக இயக்குநர் வெற்றி மாறன் பெரிய வரவேற்புக்கு தகுதியானவர். இப்படம் பெண்களின் போராட்டங்களையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் புதிய அலை சினிமா பாணியில் தனித்துவமாக சித்திரிக்கிறது. இயக்குநர் வர்ஷாவுக்கு வாழ்த்துகள். நடிகை அஞ்சலி சிவராமன் அற்புதமாக நடித்திருக்கிறார். தவற விடாதீர்கள்!" எனப் பதிவிட்டார். .
இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில், "ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. வெற்றிமாறன், அனுராக் கயாபிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியாது. பிராமண பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழையவர்கள் இல்லை. இந்த காலகட்டத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள். உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள். முதலில் உங்கள் சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள்" என இயக்குநர் ரஞ்சித்தின் பதிவைப் பகிர்ந்து காட்டமாக விமர்சித்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.