< Back
சினிமா செய்திகள்
வீர தீர சூரன் படப்பிடிப்பு தொடக்கம்: புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

'வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடக்கம்: புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
11 May 2024 9:17 PM IST

விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. மேலும், தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, படத்தின் முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், வீர தீர சூரன் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மார்ச் மாதம் திருத்தணியில் தொடங்கியதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து டைட்டில் அறிவிப்பின்போது வெளியான வீடியோவில் மளிகைக் கடை சாமான்களுக்கு மத்தியில் துப்பாக்கி, தோட்டாக்களை வைத்து ரவுடிகளை அலற விடும் மாஸ் ஆக்ஷன் காட்சி வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

இப்படத்தில் விக்ரம் கிராம தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் சீயான் விக்ரம் டி.வி.எஸ் வண்டியில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் வண்டியை ஓட்டுகிறார். படத்தின் நாயகியான துஷரா விஜயன் வண்டியில் முன்னாடி உட்கார்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக சிரித்துப் பேசியபடியுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.

மேலும் செய்திகள்