
ரிலீஸுக்கு முன்பே வசூலை அள்ளும் 'வீர தீர சூரன் 2'

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.இந்த நிலையில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீர தீர சூரன் 2' ரிலீஸுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் மட்டுமே ரூ. 30 லட்சத்திற்கும் மேல் வசூலை அள்ளி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.