< Back
சினிமா செய்திகள்
மறைந்த நடிகர் டெல்லி கணேஷை நினைவு கூர்ந்த வடிவேலு!
சினிமா செய்திகள்

மறைந்த நடிகர் டெல்லி கணேஷை நினைவு கூர்ந்த வடிவேலு!

தினத்தந்தி
|
11 Nov 2024 10:17 AM IST

நடிகர் டெல்லி கணேஷ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருந்தன. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே டெல்லி கணேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லி கணேஷ் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு டெல்லி கணேஷை பற்றி தகவல் ஒன்றை நினைவு கூர்ந்தார். அதாவது "நேசம் புதுசு படத்தில் வரும் 'என்ன கையை பிடிச்சு இழுத்தியா?' என்ற காமெடிக்கு அண்ணன் டெல்லி கணேஷ் தான் காரணம் என்றார். ஒரு நாள் அவரை நான் நேரில் சந்தித்த போது எங்கள் ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கூறினார். நான் அந்த காட்சியை நேசம் புதுசு படத்தில் பயன்படுத்தலாம் என நினைத்து அவருக்கு போன் செய்து அனுமதி கேட்டேன்.

அவர் என்னை அன்போடு கண்டித்துவிட்டு அனுமதி கொடுத்தார். அவர் மட்டும் அனுமதி கொடுக்காவிட்டால் இந்த நேரத்தில் அந்த பிரபலமான காமெடியே இருந்திருக்காது என்றார். இந்த நேரத்தில் அவரை நினைவுகூர பெருமையுடன் கடமைப்பட்டுள்ளேன்" என்றார். மேலும் "எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேஷும் ஒருவர்: எதார்த்தமான அவரின் நடிப்பையும் அன்பையும் நான் இழந்து விட்டேன்" என வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்