ஜாக்கி சான் நடித்துள்ள 'எ லெஜென்ட்' படத்தின் அப்டேட்
|இந்த படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.
90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் தற்போது 'எ லெஜென்ட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'தி மித்' படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் குங்பூ யோகா படங்களின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.
ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள இதில் ஜாக்கி சானுடன், லே சாங், நா ஜா, ஆரிப் லீ, லி சென்,பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் இளமையான போர்வீரன் மற்றும் தற்போதைய தோற்றத்தில் ஆராய்ச்சியாளர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதற்காக 20 வயதான ஜாக்கியின் தோற்றத்திற்காக ஏ.ஜ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பரபர சண்டைகள், சாகசங்கள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என இப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இந்த நிலையில் இப்படம் வருகிற ஜனவரி 3-ந் தேதி வெளியாக உள்ளது.