எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் அப்டேட்
|எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கவுள்ள "எஸ்எஸ்எம்பி 29" படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. மேலும், இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், இதன் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல் பாகம் 2027-ம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2029-ம் ஆண்டும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும், பிரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.