< Back
சினிமா செய்திகள்
Trying to become famous through negative reviews - Interview with actor Soori in Tiruchendur
சினிமா செய்திகள்

'எதிர்மறை விமர்சனம் மூலம் பிரபலமாக முயற்சி' - நடிகர் சூரி

தினத்தந்தி
|
18 Nov 2024 12:03 PM IST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர்,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து முடித்துள்ள படம் 'விடுதலை 2'. இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் முதல் பாடலான 'தினம் தினமும்' வெளியானது. இந்த பாடலை இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து தனது மனதை வருடும் குரலில் பாடியிருந்தார்.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சூரி, 'கங்குவா' பட விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

சூரி கூறுகையில், 'கடந்த ஆண்டும் திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்திருந்தேன். இந்த ஆண்டும் ஐயாவின் ஆசியை பெற வந்திருக்கிறேன். வரிசையாக நிறைய படத்தில் நடிக்க உள்ளேன். விடுதலை 2 இப்போது வர போகிறது. அடுத்த மாதம் 20-ம் தேதி என்று நினைக்கிறேன். விடுதலை படத்தின் முதல் பாகம் எப்படி உங்கள் அனைவருக்கும் பிடித்திரிந்ததோ, அதேபோல் விடுதலை 2-ம் பிடிக்கும்.

கங்குவா படம் சிறப்பாக உள்ளது. ஒரு ரசிகரா, படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என் குடும்பத்தோடு திரையரங்கம் சென்று பார்த்தேன். எதிர்மறையாக சிலர் கூறுகிறார்கள். அதை நம் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எதிர்மறை விமர்சனங்களால் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கின்றனர். அதிகமானோர் நேர்மறையாக சொல்கிறார்கள். கங்குவா படக்குழு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்' என்றார்.

தொடர்ந்து இளையராஜா குறித்து பேசுகையில், ''விடுதலை 2' திரைப்படத்தில் இளையராஜாவின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. உலகின் தலைசிறந்த மனிதர்களில் இளையராஜா ஒருவர். 82-வயதிலும் இசையை எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார். அவர் உள்ள சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அற்புதமான வாழ்வியலை கொடுக்கக்கூடிய இசையமைப்பாளர், காலத்திற்கும் நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்தான் இளையராஜா' என்றார்.

மேலும் செய்திகள்