< Back
சினிமா செய்திகள்
சூர்யா 45 படத்தில் நடிக்கும் திரிஷா
சினிமா செய்திகள்

'சூர்யா 45' படத்தில் நடிக்கும் திரிஷா

தினத்தந்தி
|
20 Nov 2024 3:41 PM IST

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14-ந் தேதி 'கங்குவா' படம் வெளியானது. இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக இப்படத்திற்கு 'சூர்யா 45' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் கதையை முதலில் ஆர்.ஜே.பாலாஜி நடிகை திரிஷாவுக்காக 'மாசாணி அம்மன்' என்ற தலைப்பில் எழுதியதாக தகவல் வெளியானது. பின்னர், இப்படத்தின் கதையை சூர்யாவுக்கு ஏற்றவாறு படக்குழு மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா 45 படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிப்பதாக ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். ஏற்கனவே சூர்யா மற்றும் திரிஷா இணைந்து மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்