< Back
சினிமா செய்திகள்
உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை - ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது குறித்து சாய்ரா பானு விளக்கம்
சினிமா செய்திகள்

உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை - ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது குறித்து சாய்ரா பானு விளக்கம்

தினத்தந்தி
|
24 Nov 2024 3:26 PM IST

ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கமளித்துள்ளார்.

மும்பை,

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் கதீஜாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் தனது தந்தையை போல் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா தம்பதியினர் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரகுமானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இதனிடையே, இவர்களது பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து சாய்ரா பானு முதல் முறையாக விளக்களித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானு பேசிய குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால்தான் நான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து விலகி இருக்க விரும்பினேன். ஆனால் யூடியூப் பயனாளர்கள், தமிழ் ஊடகத்தினர் தயவுசெய்து அவருக்கு எதிராக தவறாக எதுவும் சொல்ல வேண்டாம். அவர் அருமையான நபர், உலகின் தலைசிறந்த மனிதர்.

எனது உடல்நல பிரச்சினை காரணமாக நான் சென்னையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சென்னையில் ஏ.ஆர்.ரகுமானின் பிசியான வேலைகளுக்கு நடுவே இது சாத்தியமாகி இருக்காது. நான் அவரையோ, எனது குழந்தைகளையோ தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் ஒரு அற்புதமான மனிதர். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை இருக்க விடுங்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அவருக்கு எதிலும் தொடர்பு இல்லை, நான் என் உயிருக்கும் மேலாக அவரை நம்புகிறேன். அந்த அளவிற்கு நான் அவரை நேசிக்கிறேன், அவரும் அவ்வாறே நேசிக்கிறார்.

எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இந்த நேரத்தில் எங்கள் தனிமைக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நான் விரைவில் சென்னைக்கு வருவேன். ஆனால் நான் என் சிகிச்சையை நிறைவு செய்ய வேண்டும். எனவே, ஏ.ஆர்.ரகுமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கீழ்த்தரமான செயலை தயவுசெய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், நான் சொன்னது போல், அவர் ஒரு மிகச்சிறந்த நபர்."

இவ்வாறு சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்