பகத் பாசில் நடித்துள்ள புதிய படத்தின் டிரெய்லர் வெளியீடு
|பகத் பாசில் நடித்துள்ள 'பொகெயின்வில்லா' திரைப்படம் வருகிற 17-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள திரையுலகம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார் பகத் பாசில்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் பகத் பாசில் 'பொகெயின்வில்லா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை பகத் பாசிலின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பகத் பாசிலை வைத்து 'இயோப்பிண்டே புத்தகம், வரதன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் ஒரு அதிரடி ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற 17-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.