'மார்கோ படத்தின் வெற்றிக்கு அதுதான் காரணம்' - நடிகர் டோவினோ தாமஸ்
|'மார்கோ' வெற்றிக்கு ஆக்சன் காட்சிகள் மட்டுமே காரணம் இல்லை என்று நடிகர் டோவினோ தாமஸ் கூறியுள்ளார்.
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் உன்னி முகுந்தன், நடிப்பில் கடந்த 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.
ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தில், யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு ஆக்சன், வன்முறை காட்சிகள் மட்டுமே காரணம் இல்லை என்று நடிகர் டோவினோ தாமஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'மார்கோ ஒரு நல்ல படம். அதில் வரும் ஆக்சன் மற்றும் வன்முறை காட்சிகளால் மட்டுமே இப்படம் வெற்றிப்பெற்றுள்ளது என்று நான் நினைக்கவில்லை. நடிப்பு மற்றும் சிறந்த முறையில் கையாளப்பட்ட தொழில்நுட்பமும் காரணம். எந்த ஒரு உணர்ச்சியையும், சிறந்த முறையில் பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றால், படம் வெற்றி பெறும்' என்றார்.