வேறுபாடுகளை நிறுத்தும் நேரம்...வட, தென் இந்திய சினிமா பற்றி மனம் திறந்த தமன்னா
|நடிகை தமன்னா 'சிக்கந்தர் கா முக்தார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சென்னை,
தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது 'பப்ளி பவுன்சர்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.
தற்போது இவர், 'சிக்கந்தர் கா முக்தார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருடன், அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில், திவ்யா தத்தா மற்றும் சோயா அப்ரோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நீரஜ் பாண்டே இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் 29 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்நிலையில், வட, தென் இந்திய சினிமாவில் உள்ள வேறுபாடுகளை பற்றி தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'எங்கள் சொந்த துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது சினிமாவை மேலும் அழிக்க மட்டுமே செய்திருக்கிறது. இதுதொடர்பான பழி எப்போதும் நடிகர் அல்லது நடிகைகள் மீதுதான் விழுகிறது. வட இந்திய சினிமாத் துறையும் தென்னிந்திய சினிமாத் துறையும் ஒன்றிணைந்து ஒரு உண்மையான பான்-இந்தியா திரைப்படத்தை உருவாக்க வேண்டும்' என்றார்.