'துரதிர்ஷ்டவசமான நடிகை யார்?' - மாளவிகா மோகனன் பேச்சு
|நடிகர்களுடன் ஒப்பிடும்போது நடிகைகள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
சென்னை,
மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பிரபாசுடன் தி ராஜா சாப், கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர்களுடன் ஒப்பிடும்போது நடிகைகள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒரு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது என்றால், நடிகருக்குத்தான் அதற்கான அங்கீகாரமோ அல்லது பரிசுகளோ வழங்கப்படுகின்றன. நடிகைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாதவர்களாகவே உள்ளனர். ஒரு படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தால் நடிகையை துரதிர்ஷ்டவசமானவர் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். இது தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்ல பல இடங்களில் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது ஒரு பெரிய பிரச்சினை' என்றார்.