'இந்த ஆண்டு எனக்கு...'- நடிகர் ஜி.வி.பிரகாஷ்
|இந்த ஆண்டில் மட்டும் 'ரெபல்', 'கள்வன்', 'டியர்' என ஜி.வி.பிரகாஷ் நடித்த 3 படங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'வெயில்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து அனைத்து படங்களிலும் ஹிட் பாடல்களை கொடுத்து கவனம் ஈர்த்தார். பின்னர் 2015-ம் ஆண்டு வெளியான 'டார்லிங்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் படம் 'கிங்க்ஸ்டன்'. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இது இவரது 25-வது படமாகும்.
இந்த ஆண்டில் மட்டும் 'ரெபல்', 'கள்வன்', 'டியர்' என இவர் நடித்த 3 படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் கூறுகையில்,
"இந்த ஆண்டு எனக்கு ராசியான ஆண்டாகவே அமைந்துள்ளது. விரைவில் 'கிங்க்ஸ்டன்' படமும் வெளிவர இருக்கிறது. எனது திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளன.
என்னை பொறுத்தவரை சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்பாராத விதமாக நமக்கு கிடைக்கும். நேர்மையாக உழைத்தால் சினிமா கைவிடாது.
என் தேடல் அனைத்தும் இப்போது சினிமாவில் மட்டுமே. நடிப்பிலும், இசையிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என்றார்.