'இதனால்தான் 2 மாதங்களுக்கு ஒருமுறை என் படங்கள் வெளியாவதுபோல் தெரிகிறது' - விஜய் ஆண்டனி
|இந்த வருடத்தில் விஜய் ஆண்டனியின் 3-வது படமாக ஹிட்லர் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த வருடம் மட்டும் இதுவரை 2 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 3-வதாக விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய விஜய் ஆண்டனி, படங்களின் வெற்றியையோ தோல்வியையோ எதையுமே தான் சுமக்க மாட்டேன் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'நான் நீண்ட காலத்திற்கு முன்பு சில திரைப்படங்களில் நடிக்க கையெழுத்திட்டேன். ஆனால், சில காரணங்களால் அவை தாமதமாகிவிட்டன. அதனால்தான், இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என் படங்கள் வெளியாவதுபோல் தெரிகிறது. ஒரு படத்தில் நடிக்கும்போது எனது 100 சதவீதத்தை கொடுக்கிறேன். அந்த படங்களின் வெற்றியையோ தோல்வியையோ எதையும் நான் சுமக்க மாட்டேன். எதுவும் என்னை உற்சாகப்படுத்துவதில்லை. உலகில் உள்ள எதுவும் என்னை அசைக்க முடியாது என்று நினைக்கிறேன்', என்றார்
விஜய் ஆண்டனி நடிக்கும் ஹிட்லர் படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.