'இதனால்தான் தங்கள் படத்தில் நடிக்கும் நடிகைகளை நடிகர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்' - டாப்சி
|நடிகை டாப்சி, 'டன்கி' மற்றும் 'ஜுட்வா 2' ஆகிய படங்களுக்கு அதிக சம்பளம் பெற்றதாக இணையத்தில் தகவல் பரவின.
மும்பை,
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் நடித்த 'டன்கி' மற்றும் 'ஜுட்வா 2' படங்களுக்கு அதிக சம்பளம் பெற்றதாக இணையத்தில் தகவல் பரவின. தற்போது அதற்கு டாப்சி மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் ஜுட்வா 2 மற்றும் டன்கி போன்ற படங்களை பணத்திற்காக செய்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மைக்கு நேர்மாறானது. அந்த படங்களுக்கு நான் அதிக சம்பளம் பெறவில்லை' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்கள் படத்தில் நடிக்கும் நடிகைகளை நடிகர்களே தேர்ந்தெடுப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "இப்போது, தங்கள் படங்களில் ஹீரோயின் யார் என்பதை ஹீரோக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான். அதில் சிலர், டிரெண்டில் இருக்கும் ஒருவரையும், அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒருவரையும் நடிக்க வைக்க விரும்புவார்கள். சிலர், தங்களை விட சிறிய நடிகைகளை நடிக்க வைக்க நினைப்பார்கள்' என்றார்.