மும்பை சென்றதற்கான காரணத்தை கூறிய சூர்யா - வைரலாகும் வீடியோ
|ஜோதிகா தனது 18 வயதில் சென்னைக்கு வந்ததாக சூர்யா கூறினார்.
மும்பை,
கோலிவுட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் சூர்யா மற்றும் ஜோதிகாவும் ஒருவர். இவர்கள் கொரோனா தொற்றுக்குப் பிறகு மும்பைக்கு சென்றனர். தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக அங்கு சென்றதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, ஜோதிகாவின் தியாகத்தை அங்கீகரிக்க மும்பைக்கு சென்றதாக கூறினார்
இது குறித்து அவர் கூறுகையில், "ஜோதிகா தனது 18 அல்லது 19 வயதில் சென்னைக்கு வந்தார். திருமணத்திற்கு பின்னர் 27 ஆண்டுகள் என்னுடன், எனது குடும்பத்தினருடன் இருந்தார். இதனால் அவர் தனது தொழில், நண்பர்கள் போன்ற அனைத்தையும் விட்டுவிட்டார்.
ஜோதிகாவின் இந்த தியாகத்தை அங்கீகரிக்க நினைத்தேன். மும்பை சென்றதற்கு இதுவும் ஒரு காரணம். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, அவர் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க வேண்டியதாயிற்று. இதனால், ஜோதிகாவின் கெரியர் சிறிது தேக்கமடைந்தது. இதுதான் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தையும் தொடங்க வழிவகுத்தது.
ஜோதிகா மும்பையில் தனது பெற்றோருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான், நான் மற்றும் நானே என்பதில் இருந்து நமது என்ற மனநிலையை மாற்றுவது முக்கியம். ஒரு நடிகராக அவரது வளர்ச்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு மேலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார். இது குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.