எஸ்.ஜே.சூர்யா இல்லை...'மாநாடு' படத்தில் நடிக்க வெங்கட் பிரபு முதலில் அணுகியது இவரைத்தான்
|'மாநாடு' படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா நடிப்பதற்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் அரவிந்த்சாமியை அணுகி இருக்கிறார். இதனை நடிகர் அரவிந்த்சாமி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நான் நடிக்கவிருந்தேன். தேதி இல்லாததால் ஒரு மாதம் கழித்து நடிக்க அவகாசம் கேட்டேன். ஆனால் படக்குழுவால் அதுவரை காத்திருக்க முடியவில்லை, அதை மதிக்கிறேன்.
ஆனால், நான் இன்னும் மாநாடு பார்க்கவில்லை. ஏனென்றால், அந்த பாத்திரத்திற்குள் முழுவதுமாக இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரத்தில் மற்றவர்களை வைத்து பார்க்க முடியவில்லை. ஆனால், ஒருநாள் படத்தை பார்ப்பேன்,' என்றார்.