மோகன்லால் நடித்துள்ள 'பரோஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
|மோகன்லால் நடித்துள்ள ‘பரோஸ்’ படத்தின் தமிழ் டிரெய்லரை விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
சென்னை,
பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் தற்போது ஒரு படத்தை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. வாஸ்கோடகாமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்று கூறப்படுகிறது.
இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் வருகிற டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் மலையாள டிரெய்லர் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அதில் பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் இந்ப்படம் மூலம் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.