சினிமாவில் 32 ஆண்டுகள் நிறைவு செய்த அஜித்துக்கு 'விடாமுயற்சி' படக்குழு வாழ்த்து
|நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக 'விடாமுயற்சி' படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவு பெறுவதையோட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித்.
'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. சமீபத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக 'விடாமுயற்சி' படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் "32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும்… யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.