நாளை வெளியாகும் 'கங்குவா' படத்தின் இரண்டாவது பாடல்
|'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'கங்குவா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'கங்குவா' திரைப்படத்தின் 'யோலோ' என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.