'கங்குவா' திரைப்படத்தின் புதிய முயற்சியை வரவேற்க வேண்டும் - நடிகை அமலாபால்
|‘கங்குவா’ திரைப்படம் தொடர்பாக ஜோதிகா முன்வைத்த கருத்துக்களை நடிகை அமலாபால் ஆதரித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான இப்படம் வெளியாகி உள்ளது. 11ம் நூற்றாண்டு மற்றும் தற்காலத்தில் நடக்கும் காட்சிகள் 'கங்குவா' படத்தில் இடம் பெற்றுள்ளன.
கங்குவா படத்தில், அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 'கங்குவா' படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா திட்டமிட்டு படத்தை மோசமாக விமர்சிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அதனை ஆதரித்து நடிகை அமலாபால் தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
ஜோதிகாவின் கருத்துக்களை பகிர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், கங்குவா விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரை துறையின் புதிய சிந்தனைகளை கொண்ட படைப்பாற்றல் மற்றும் புதிய முயற்சியை வரவேற்க வேண்டும் எனக்கு குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர்களின் புதிய முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவோம் என ஆதரவு கரம் நீட்டி உள்ளார்.
தமிழில் மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் டைரக்டர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், தனது நண்பர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான 'தி டீச்சர், போலா, ஆடு ஜீவிதம்' படங்கள் நல்ல கவனம் பெற்றன. தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் 'லெவல் கிராஸ்' படத்தில் நடித்துள்ளார்.