காதலரை அறிமுகப்படுத்திய 'லவ் டுடே' பட நடிகை
|மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக ரவீனா ரவி நடித்திருந்தார்.
சென்னை,
'சாட்டை' படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக திரைத்துறையில் அறிமுகமானவர் ரவீனா ரவி. இவர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், ராசிகண்ணா, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் படத்தில் நடித்து பிரபலமானார். மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக வசனமே பேசாமல் நடித்திருப்பார்.
எந்த வசனமும் பேசவில்லை என்றாலும் இவரது கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு மலையாளத்தில் தேவன் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'வாலாட்டி" என்ற படத்தில் ரவீனா ரவி நடித்திருந்தார். அப்போது இப்படத்தின் இயக்குனருடன் ரவீனா ரவிக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து காதலரை ரவீனா அறிமுகம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.