உருவ கேலி செய்த தொகுப்பாளர்... இயக்குனர் அட்லீ கொடுத்த நச் பதில்
|'தெறி' படம் இந்தியில் ரீமேக் ஆகி வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது.
மும்பை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் தற்போது, பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் என தெரிகிறது. படத்தின் பாடல்கள் சமீபத்தில் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அட்லீ, விஜய், ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நிகழ்ச்சியான 'கபில் சர்மா ஷோ'-வில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் சர்மா, அட்லீயை பார்த்து, "முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும் போது அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?" என்று உருவக் கேலி செய்யும் தொனியில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அட்லீ, "உங்கள் கேள்வியின் நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு நான் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தவர். அவர் என்னுடைய ஸ்கிரிப்டை மட்டும்தான் கேட்டார். அதைத் தவிர நான் எப்படி இருக்கிறேன், இதை என்னால் பண்ண முடியுமா இல்லையா என பார்க்கவில்லை. ஆனால் அவர் நான் சொல்லும் விதத்தை விரும்பினார். இதைப் போலத்தான் உலகமும் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். யாரையும் அவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களின் உள்ளத்தை வைத்து மதிப்பிட வேண்டும்" என்றார். இந்தப் பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அட்லீக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.